மாவட்ட செய்திகள்

தர்மபுரி-சேலம் மாவட்ட எல்லை: சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி; போலீசார் தீவிர கண்காணிப்பு

தர்மபுரி-சேலம் மாவட்ட எல்லையில் பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்ட சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா எஸ்.பாளையம்-வேம்பாடி பாலம் அருகே சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டி-பொம்மிடி சாலையின் குறுக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள எஸ்.பாளையம், அக்கரையூர், கரடியூர், வீராச்சியூர், பூமரத்தூர், வேம்படியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் இந்த சாலையில் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் சாலை துண்டிக்கப்பட்ட பகுதியை அரூர் உதவி கலெக்டர் பிரதாப், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியில் திரண்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சாலை வழியாக சட்டவிரோதமாக வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் நுழைவதை தடுக்கவும், கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தவிர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் ராமமூர்த்திநகர் சாலை வழியாக தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பொம்மிடி மற்றும் தர்மபுரிக்கு சென்று வரலாம் என்றும் அப்போது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்ட அந்த சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் திடீரென மூடப்பட்டது. அங்கு தடுப்புகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைக்காக அந்த சாலை வழியாக மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்தசாலையில் சென்றவர்களிடம் அடையாள அட்டைகள் கேட்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அடையாள அட்டைகளை காண்பித்தவர்களை மட்டும் போலீசார் உரிய விசாரணைக்கு பின் அந்த சாலை வழியாக சென்று வர அனுமதித்தனர். அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.