மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளில் அமர்ந்து வியாபாரிகள் போராட்டம்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளில் அமர்ந்து வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அருகே காந்தி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு மொத்த மற்றும் சில்லறை கடைகள் என 300-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவந்தது. இதனால் காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கொரோனா பரவலால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் திறக்கப்பட்டது. அதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டன. பின்னர் அங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதால், நத்தம் சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்துக்கு தற்காலிக மார்க்கெட் மாற்றப்பட்டது.

அதேநேரம் அரசு ஐ.டி.ஐ.- யில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, அரசின் அனுமதி அளித்ததும் ஐ.டி.ஐ. திறக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே காந்தி மார்க்கெட்டில் இருந்த கடைகளை இடித்து விட்டு, புதிதாக கடைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. அதோடு மார்க்கெட் முழுவதும் பேவர்பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்கப்படுவதோடு, கழிப்பறை வசதியும் செய்யப்படுகிறது.

இதில் ஒரு பகுதியில் தரைத்தளம் அமைத்து கடைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. மேலும் மற்றொரு பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, வியாபாரிகளும் முன்வைப்பு தொகை, வாடகையை செலுத்தி கடைகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகளில் தங்களுடைய பெயரை எழுதினர்.

மேலும் மார்க்கெட்டில் பணிகள் நிறைவுபெற்ற இடத்தில் காய்கறி வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். புதிதாக கட்டும் கடைகளை ஏற்கனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடைகளில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...