மாவட்ட செய்திகள்

சிகரெட் புகையை வாலிபர் முகத்தில் ஊதியதில் தகராறு 9 பேர் மீது வழக்கு

சிகரெட் புகையை வாலிபர் முகத்தில் ஊதியதில் தகராறு காரணமாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாரமங்கலம், மார்ச்.29-

தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனது மாமா மாரியப்பனுடன், அதே பகுதியில் உள்ள ஜெயராஜ் என்பவரின் பெட்டி கடைக்கு தயிர் பாக்கெட் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காந்தி என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி அதே இடத்தில் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது காந்தி, சிகரெட் புகையை மாரியப்பனின் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்து கவனித்த ஆனந்த் எதற்கு இவ்வாறு செய்கிறாய்? என்று காந்தியிடம் கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பிறகு காந்தி தனது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சென்று ஆனந்த்திடம் தகராறு செய்து ஆனந்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், காந்தி, கோகுல்ராஜ், மாரியப்பன், வினோத்குமார், சந்தோஷ், சதீஸ், ரமேஷ், ஆசைத்தம்பி, ஏழுமலை ஆகிய 9 பேர் மீது தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.