ஆலந்தூர்,
ஏமாற்றம்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட, தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது நல்ல விஷயம் தான். ஜெயலலிதா மரணத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இது தொடர்பாக தற்போதைய தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது பற்றிய அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடுகள் வேறு. ஆனால் அதே சமயம் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்திற்கும் மிகப்பெரிய அவமானத்தை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்து ஏற்படுத்தி உள்ளன.
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வேட்டி இருக்குமா? சட்டை இருக்குமா? என தெரியவில்லை. இது போன்ற நிலையில் தமிழகம் போய் கொண்டு இருப்பது தலைகுனிவான ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.