மாவட்ட செய்திகள்

நாய்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 6 பேர் கைது

கீழையூர் அருகே நாய்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

புகார்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் செருதூர் பகுதியில் சுற்றி திரிந்த நாய்களை யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டதாக பிரதாபராமபுரம் கிராம நிர்வாக அலுவலர் மன்மதனுக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மன்மதன் இதுகுறித்து கீழையூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழையூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சுட்டு கொல்லப்பட்ட நாய்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் புதைத்தனர். மேலும் இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ, கீழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள், தலைமை காவலர் சுகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

6 பேர் கைது

விசாரணையில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வீரா நகரை சேர்ந்த கூத்தலை மகன் குருசாமி (வயது 57), அதேபகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் நாகூரான் (45), தர்மலிங்கம் மகன் சின்னசாமி (50), ராஜேந்திரன் மகன் முருகன் (35), முத்துசாமி மகன் சின்னபிள்ளை, கவுசாலம் மகன் நாகூரான் (47) ஆகியோர் நாய்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். செருதூர் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது நாய்கள் எங்களை கடிக்க வந்ததால் அதனை சுட்டதாக அவர்கள் கூறினர்.