காஞ்சீபுரம்,
தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டியும் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு விலக்கு என்பது மாணவர்களை ஏமாற்றும் செயலாகும்.
5 அணியாக மாற வாய்ப்பு
நீட் தேர்வே கூடாது என்பது தி.மு.க. வின் நிலைப்பாடு. கருணாநிதி உடல் நடத்துடன் நலமாக உள்ளார். அ.தி.மு.க.வில் தற்போது 3 அணிகள் உள்ளது. வரும் காலங்களில் 5 அணியாக கூட மாற வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வினர் ஏரி, குளங்களை தூர்வாரி உள்ளனர். அந்த விவரங்களை சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். கமலின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, நகர செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், வாலாஜாபாத் பி.சேகர், சிறுவேடல் செல்வம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீவி.மதியழகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை செயலாளர் தீனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.