மாவட்ட செய்திகள்

அவசர கால தேவைக்காக முதியோருக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை - நாராயணசாமி உறுதி

அவசர கால தேவைக்காக முதியோருக்கு வங்கிகளில் எவ்வித முகாந்திரமுமின்றி ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு, ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனம் சார்பாக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முதியோர் திருவிழா கடற்கரை காந்தி திடலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு ஹெல்ப்பேஜ் இந்தியா திட்ட மேலாண்மை தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான உதவித்தொகையை உரிய நேரத்தில் வழங்கி வருகிறது. இதற்காக அரசு ரூ.330 கோடி நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்காமல் பலரும் தவித்து வந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உதவித்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. முதியோருக்கு வங்கிக்கடன், பஸ் கட்டண சலுகை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எனவே முதியோருக்கு அவசர கால தேவைக்காக வங்கிகள் எந்தவித முகாந்திரமும் பெறாமல் ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தப்படும். அதேபோல் பஸ் கட்டண சலுகை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதியோர் நல கூட்டமைப்பு தலைவர் தனலட்சுமி வரவேற்றார். இதில் முதியோர் நல கூட்டமைப்பு, ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்பட முதியோர் பலர் கலந்துகொண்டனர்.