மறியல்துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலம் டி.புதுப்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் நரேந்திரன்(வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் டி.புதுப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புலிவலம் வந்து அங்கு நிறுத்திவிட்டு திருச்சிக்கு பஸ்சில் வேலைக்கு சென்று விட்டு இரவு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல திருச்சிக்கு வேலைக்கு சென்றுவிட்டு புலிவலம் வந்த நரேந்திரன், நண்பருக்கு போன் செய்து தான், புலிவலம் வந்து விட்டதாகவும் சற்று நேரத்தில் ஊருக்கு வந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இரவு 10 மணிக்கு மேல்ஆகியும் நரேந்திரன் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புலிவலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நரேந்திரனை தேடினார்கள். அப்போது புலிவலத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் என்னும் இடத்தில் சாலையோரம் நரேந்திரனின் மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது நரேந்திரன் இடுப்பு பகுதியில் பலத்த காயத்துடனும், காதில் ரத்தம் வடிந்த நிலையிலும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 1 மணிநேரத்துக்கு மேலாகியும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த நரேந்திரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு புலிவலத்தில் இருந்து திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீசார் கூறியதின் பேரில் சாலை மறியலை கை விட்டனர். பின்னர் நரேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக் காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்த சம்பவம் காரணமாக திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் நரேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. இதுகுறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திரன் விபத்தில் மரணம் அடைந்தாரா? அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்பன கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.