மாவட்ட செய்திகள்

மரக்காணம் அருகே கார் கவிழ்ந்து தனியார் மருத்துவமனை ஊழியர் சாவு; 5 பேர் படுகாயம்

மரக்காணம் அருகே கார் கவிழ்ந்து தனியார் மருத்துவமனை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்,

பீகார் மாநிலம் பாட்னா குர்லோஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்குமார் மகன் ராகுல்குமார் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் தனது நண்பர்களான அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலருடன் ஒரு காரில் புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு அவர்கள் அனைவரும் புறப்பட்டனர். காரை ராகுல்குமார் ஓட்டிச்சென்றார்.

கார், கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணத்தை அடுத்த தாழங்காடு பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிமாக நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ராகுல்குமார், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்களான பீகார் மாநிலம் போஜ்பூர் கர்ஜா பகுதியை சேர்ந்த ஷாஜி புஷான்சிங் (24), ஜார்கண்ட் ராஞ்சியை சேர்ந்த அஷிஷ்ராஜன் (24), பாட்னாவை சேர்ந்த ராபிபூஷன் (23), சபீர் (23), பெங்களூருவை சேர்ந்த வருண் (30) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்கள் 5 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.