கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே வசந்தராயன்பாளையத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வருமானம், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்காக பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இந்த இ-சேவை மையம் கடந்த சில மாதங்களாக இணைய தள சேவை குறைபாடு காரணமாகவும், அலுவலர் வராததாலும் அவ்வப்போது பூட்டி கிடக்கிறது.
இதனால் கடலூர் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த 2 நாட்களாக இந்த இ-சேவை மையம் அலுவலர் வராததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் இ-சேவை மையத்துக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாமலும், விண்ணப்பிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் இ-சேவை மையம் திறக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்து விட்டு நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது. ஆகவே பொதுமக்களுக்கு தடையில்லா சேவை வழங்குவதற்காக இந்த இ-சேவை மையத்தை திறந்து, செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் இ-சேவை மையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் வேலை பார்த்து வருவதால், அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.