மாவட்ட செய்திகள்

எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள் போராட்டம்

எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள் தரையில் படுத்து உறங்கும் போராட்டம்

காரைக்குடி, டிச.26-

காரைக்குடி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறை இயங்கி வருகிறது. இந்த பட்டறையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நீண்டகாலமாக தங்களுக்கு வழங்கிய கூலியை உயர்த்தி தரும்படியும், தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்படபல்வேறு கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கிடைக்காமல் கடும் நெருக்கடியில் இருந்து வந்ததால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்து காரைக்குடி நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டினர். இதையடுத்து கடந்த 20-ந்தேதி முதல் மத்திய அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு காரைக்குடி பருப்பூரணி கோவில் கரையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கு தரையில் படுத்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் சந்தித்து கோரிக்கைகளை ஏற்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

பட்டறை தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால் காரைக்குடி பகுதியில் செட்டிநாடு பொங்கல் பானைகள் தயாரிப்பு பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.