தஞ்சாவூர்:-
தஞ்சை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிங்கார வடிவேல் கொரோனாவுக்கு பலியானார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.
தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சிங்கார வடிவேல் (வயது 87). வக்கீலான இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆவார். இவர், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 1979-ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலிலும் அதன் பின்னர் 80, 84, 89 ஆண்டுகளிலும் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் அதிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கொரோனாவுக்கு பலி
இந்த நிலையில் சிங்கார வடிவேல் எம்.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடல் தகனம்
இதையடுத்து சிங்கார வடிவேல் உடல் யாகப்பா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு பின்னர் தஞ்சை ரெட்டிப் பாளையத்தில் உள்ள மாநகராட்சி மின்சார சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறந்த சிங்கார வடிவேலின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் ஆகும். இவருக்கு கஸ்தூரிபாய் என்ற மனைவியும், திருவேரகன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர். தமிழக அரசால் வழங்கப்படும் காமராஜர் விருது கடந்த 2012-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.