மாவட்ட செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் தேவையில் இருக்கும் விவசாயிகள் பயன் பெறுவர்

பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் தேவையில் இருக்கும் விவசாயிகள் பயன்பெறுவர் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் தேவையில் இருக்கும் விவசாயிகள் பயன்பெறுவர் என்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா சார்பில் நல்லாட்சி என்ற தலைப்பில் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.25 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி திரட்ட வேண்டியதிருக்கிறது. இந்த பிரச்சினையை அரசால் நிர்வகிக்க முடியும். நிவாரண நடவடிக்கையை நடைமுறைப்படுத்த சிறிது காலம் ஆகும். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதும் அதன்பின்னர் நேரிடும் சூழலை சமாளிக்க சில நிதி கருவியை அரசு உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதால், விலைவாசி உயராது.

மராட்டியத்தில் கடந்த 2008ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி ஆனபோது மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. இது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கையாளர் சமர்ப்பித்த அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடியால் சிறு குறு விவசாயிகள் பயன்பெறவில்லை, மாறாக வசதிபடைத்தவர்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆகையால், இப்போதைக்கு எங்களுக்கு இருக்கும் சவால், இதுபோன்ற முறைகேடுகளை ஒழித்துக்கட்டுவதே ஆகும். பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் தேவையில் இருக்கும் விவசாயிகள் பயன்பெறுவர்.

ஆந்திர பிரதேச முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வங்கி கணக்கு முறைகேடுகளை ஒழித்துக்கட்டினார். இதுபோன்ற மாதிரியை பின்பற்றுவது பற்றி நாங்களும் பரிசீலித்து வருகிறோம். இந்த மாதம் நடைபெறும் மந்திரி சபை கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.