மாவட்ட செய்திகள்

பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்: மின்சார கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு

புதுவையில் மின்சார கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் உத்தேச கட்டண விவர நகல்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அரசின் மின்துறை சார்பில் 2018-19-ம் நிதியாண்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதியை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கேட்டுள்ளது.

இதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்கு சேவா சமுதாயக்கூடத்தில் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எம்.கே.கோயல், உறுப்பினர் நீரா மாத்தூர், செயலாளர் கீர்த்தி திவாரி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டனர்.

அப்போது மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறியதாவது:-

ஆண்டுதோறும் நடத்தப்படும் இதுபோன்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மின்துறை நிர்வாக சீர்கேடுகளை களைந்து மின்திருட்டு, இழப்பை நிறுத்தும்படி கருத்து தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது?

எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையம் மின்துறைக்கு பரிந்துரை செய்தது? அதில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன? நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக மின்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுவரை மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா தெரிவித்ததாவது:-

மின்கட்டணம் குறைந்த மாநிலமாக இருந்த புதுச்சேரி இப்போது நாட்டிலேயே அதிக மின்கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக மாறிவிட்டது. மின்கட்டண உயர்வு காரணமாக புதுவையில் இருந்த பல தொழிற்சாலைகள் வெளியேறிவிட்டன. கட்டண உயர்வினால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு நிறுவனங்கள் பலவும் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. ஆனால் சாதாரண நபர்கள் கட்டண பாக்கி வைத்து இருந்தால் உடனே மின் இணைப்பினை துண்டிக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. வெங்கட்டா நகரில் ஒரேஒரு துணை மின்நிலையம் மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காலை 11 மணி வரை கூட தெருமின் விளக்குகள் எரிகின்றன. அதைக்கூட சரிசெய்வதில்லை. ஆண்டுதோறும் பொதுமக்களிடம் கருத்து கேட்கிறோம் என்று கூட்டத்தை நடத்துகிறீர்கள். ஆனால் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தெரியவில்லை. அப்படியானால் இந்த கூட்டம் எதற்கு? நீங்களாகவே கட்டணத்தை உயர்த்திக்கொள்ள வேண்டியதுதானே?

இவ்வாறு பாலா பேசினார்.

இதேபோல் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் பேசிய பலரும் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் பழுதான மின் மீட்டரை கூட மின்துறை சரிசெய்து தருவதில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள். வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடைய சமூக அமைப்புகளை சேர்ந்த சிலர் ஆணைய தலைவரின் இருக்கை அருகே வந்து, கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த கூட்டம் தேவைதானா?, பொதுமக்களின் கருத்துக்கு எதிராக கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறி ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட உத்தேச கட்டணம் விவரங்கள் அடங்கிய நகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின் தொடர்ந்து கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...