மாவட்ட செய்திகள்

தஞ்சை மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவு

தஞ்சை மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக இருந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசலில் உள்ள மீன்மார்க்கெட்டில் 56 சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேசுவரம், புதுச்சேரி, முட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் இருந்து நாட்டு மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்தும் நாட்டு மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக கடல் மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. இந்த தடைக்காலம் முடிவடைந்து கடந்த 14-ந் தேதி நள்ளிரவு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றதால் அதிகஅளவில் மீன்கள் சிக்கும் என்றும், மார்க்கெட்டிற்கு அதிகமாக கடல் மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தஞ்சை மீன்மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் வரத்து மிக, மிக குறைவாகவே இருந்தது. சில கடைகளில் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. சில கடைகளில் ஆந்திராவில் இருந்து வந்திருந்த நாட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

விலை அதிகரிப்பு

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தாலும் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து இன்னும் அதிகரிக்கவில்லை. இன்று(அதாவது நேற்று) மிக குறைந்த அளவே கடல் மீன்கள் கொண்டு வரப்பட்டன. மீன் வரத்து குறைவாக இருந்தாலும் மீன்களின் விலை அதிகமாக தான் இருக்கிறது. 1 கிலோ சங்கரா மீன் ரூ.250-க்கும், விரால் மீன் ரூ.700 வரையும், ஆந்திரா கெண்டை ரூ.120-க்கும், உள்ளூர் கெண்டை ரூ.150 வரையும் விற்பனையானது.

பாப்புவவ்வா ரூ.120-க்கும், பொடிப்பாறை ரூ.100-க்கும், கோலா மீன் ரூ.100 வரையும், சம்பா நண்டு ரூ.240-க்கும், சிலுவை நண்டு ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரளாவிலும் மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் கேரளா வியாபாரிகள் அனைவரும் மீன் இறங்கு தளத்திற்கு நேரடியாக சென்று அதிக மீன்களை வாங்கி சென்றுவிடுகிறார்கள். மீன்கள் அதிகஅளவில் விற்பனைக்காக வரும்போது விலை குறையும். வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் உள்ளூர் கெண்டை மீன் வரத்து குறைவாக உள்ளது. ஆந்திராவில் இருந்து தான் கெண்டை மீன்கள் வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெண்கள் சிலர் கூறும்போது, தடைக்காலம் முடிந்ததால் மீன்கள் அதிகஅளவில் வரும் என்ற எதிர்பார்ப்பில் வந்தோம். ஆனால் மிக குறைந்த அளவே கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அதுவும் விலை அதிகமாக விற்கப்படுகிறது என்றனர்.