மாவட்ட செய்திகள்

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகள்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

புதுவையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சுகாதாரத்துறை செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

*புதுவை மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

*அனைத்து துறைகளிலும் குறிப்பாக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் அவை களையப்பட வேண்டும்.

*புதிய உபகரணங்கள் வாங்க வேண்டியிருந்தால் போர்க்கால அடிப்படையில் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மேலும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*பொதுமக்கள் கோடை வெயிலினால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்க புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகள் தயாராக இருக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.