மாவட்ட செய்திகள்

சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்னம்: மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி

சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்னத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று முதல்–மந்திரி உறுதியளித்தார்.

மும்பை,

சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்னத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்தார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பை அரபிக்கடலில் பிரமாண்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய சிலை நிறுவப்படுகிறது. இதையொட்டி, கடந்த மாதம் நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்ன கட்டுமான பணியால் மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், இதனால், தங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

புத்தக வெளியீட்டு விழா

இந்த நிலையில், சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்ன கட்டுமான பணிக்கு பின்னால் இருந்த இடையூறுகள் குறித்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. விநாயக் மேத்தா புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதில், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

இந்த புத்தகத்தின் மூலம் சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்ன அடிக்கல் நாட்டு விழாவுக்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆண்டு போராட்டங்களை பொதுமக்கள் நினைவில் வைத்து கொள்வர். சத்ரபதி சிவாஜிக்கு என்னுடைய சேவையை அளிப்பதால், என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து செல்வோம். சிவாஜி மகாராஜாவின் நினைவுச்சின்னம் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.