இவர்கள் அணிந்திருப்பது ஆடைகள் அல்ல.. இன்றைய உலகின் அவலங்கள்! இவர்கள் உடலை மறைத்திருப்பது உடைகள் அல்ல.. உலகை உலுக்கும் நஞ்சுகள்! அழகுப்பெண்களான இவர்கள் ஐவரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை உலகுக்கு உணர்த்த அபூர்வ ஆடைகளில் அவதாரமெடுத்திருக்கிறார்கள்.
பொருட்களை கொண்டு செல்லும் பாலிதீன் பைகள்- பானங்களை குடித்துவிட்டு வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்கள்- உணவை சாப்பிட்டுவிட்டு சாலை ஓரத்தில் எறியப்படும் தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், ஸ்டிராக்கள்- தேவை முடிந்ததும் குப்பையில் கொட்டப்படும் சி.டி.க்கள் இவை அனைத்தும் இந்த மண்ணை விஷமாக்கும் வீரியமிக்க பொருட்கள். அவைகள் மட்காது. மனிதர் களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தானது.
இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அழகாக எடுத்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஆறு பேரின் ஆசையில் உருவான அற்புதமான ஆடைகள் இவை. திட்டத்தை தீட்டிய ஐந்து பேர் இளைஞர்கள். அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ரெட்டி.
கண்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு உடைகள் பலரது பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருக்க, வடிவமைப்பாளர் காவ்யா ரெட்டியை தொடர்பு கொண்டோம்!
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுப்புறத்திற்கும், உடல் நலனுக்கும் கெடுதியை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவைகளை தவிர்க்காமல் நாம் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறுவயதிலே உண்டு. அதனால் பாலிதீன் கவர் மற்றும் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி கலைப்பொருட்களை உருவாக்கிவந்தேன். பிற்காலத்தில் ஆடை வடிவமைப்பாளரானேன்.
சில வாரங்களுக்கு முன்பு, என்னை போன்ற சமூக சிந்தனை கொண்ட இளைஞர்களான செந்தில்குமார், பிரபு, அடைக்கப்பன், ரூபன், கவின் ஆகிய ஐந்து பேரும் என்னை சந்தித்தார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை எல்லாம் பயன்படுத்தி ஆடை உருவாக்கி சமூக விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என்றார்கள். அதற்கான அடிப்படையான திட்டங்களையும் உருவாக்கிவைத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் போட்டோகிராபர்கள் என்பதால் அதனை அழகாக காட்சிப்படுத்தவும் செய்தார்கள். அவர்கள் திட்டத்திற்கு நான் செயல்வடிவம் கொடுக்க, எனக்கிருந்த சமூக அக் கறைதான் காரணம். எங்கள் ஆறு பேரின் முயற்சியால் இந்த விழிப்புணர்வு ஆடைகள் உருவாகியிருக்கின்றன என்கிறார், காவ்யா.
இந்த ஐந்து விதமான ஆடைகளை உருவாக்க தேவையான பாலிதீன் கவர், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், ஸ்டிராக்கள், காலி பாட்டில்கள் போன்றவைகளை எல்லாம் அந்த விழிப்புணர்வு இளைஞர் குழுவினரே சேகரித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
அனைவரையும் கவரும் விதத்தில் அற்புதமாக அவைகளை ஆடை போன்று உருவாக்க காவ்யா எடுத்த முயற்சிகள் அவ்வளவு எளிதாக கைகூடியிருக்கவில்லை. ஏராளமான சிரமங்களை அவர் சந்தித்திருக் கிறார்.
பாலிதீன் கவர்களை ரோஜா பூக்கள் போன்று வடிவமைத்தால் பார்க்க அழகாக தோன்றும் என்ற எண்ணத்தில் அவைகளை சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விதமான நிறங் களில் பூக்களாக்கினோம். 300 கவர்கள் மூன்று வண்ண ரோஜாக்களாகின. இடுப்பின் கீழ்ப்பகுதிக்கு ரோஜா மலர் ஆடையை வடிவமைத்தோம். பிளாஸ்டிக் பைகளை மேல் பகுதி ஆடையாக்கினோம். அதுவும் பார்ப்பதற்கு துணியால் உருவாக்கப்பட்ட அழகான ஆடை போலவே காட்சியளித்தது.
பிளாஸ்டிக் பாட்டில் ஆடை எங்களை நிறையவே வேலைவாங்கிவிட்டது. அந்த காலி பாட்டில்களை எளிதாக சேகரித்துவிடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நிறம், அளவு, டிசைன் போன்ற அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால் பல இடங்களில் தேடிப்பிடித்து வாங்கித்தந்தார்கள்.
முதலில் பாட்டில்களை அப்படியே கோர்த்து, தைத்து ஆடைபோல் ஆக்கினோம். ஆனால் அதன் எடை மிக அதிகமாக இருந்தது. கனமான ஆடை என்பதால் அதை அணியவும் கடினமாக இருந்தது. பின்பு பாட்டில்களை பாதியாக வெட்டி, உடையாக உருவாக்கினோம். பாட்டில் மூடிகளை மேலாடையாக தைத்தது ஆடைக்கு பொருத்தமான டிசைனாக அமைந்தது. அது மிகுந்த மனநிறைவைத் தந்தது என்கிறார், பேஷன் டிசைனர் காவ்யா.
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், கரண்டிகளை கொண்டு ஆடை உருவாக்கியதும் கடினமான பணியாகவே அமைந்திருக்கிறது. அந்த கவர்ச்சி உடைக்கு 1000 ஸ்டிராக்கள், 200 கரண்டிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
முதலில் ஸ்டிராக்களை ஒட்டி ஆடையாக்க திட்டமிட்டோம். ஆனால் பசை மூலம் ஒட்டமுடியவில்லை. ஒன்றிரண்டு ஒட்டினாலும் பெயர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அதன் பிறகு ஒவ்வொன்றையும் நூல் கொண்டு தைத்தோம். ஆனாலும் எதிர்பார்த்தபடி உடலமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக வளைக்க முடியவில்லை. பின்பு தையல் முறையை மாற்றி, ஒரு ஸ்டிராவுக்கு 10 தையல்கள் என்ற கணக்கில் இணைத்தோம். அதன் பிறகே உருவமைப்புக்கு தக்கபடி ஸ்டிராக்கள் வளைந்து கொடுத்தன. ஸ்டிராக்களை நெருக்கமாகவைத்து கையால் தைத்தபோது காயம் ஏற்பட்டுவிட்டது. அந்த உடையின் நடுவில் இருக்கும் கரண்டிகளை கோர்க்கவும் மெனக்கென வேண்டியிருந்தது. வெள்ளை நிறத்தில்தான் கரண்டிகள் கிடைத்தன. ஆடைக்கு பொருத்தமாக தெரியவேண்டும் என்பதற்காக அதனை நீல நிறத்திற்கு மாற்றினோம். அவை கச்சிதமாக பொருந்தியது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது என்கிறார்.
வெள்ளை நிறத்தில் தேவதை போல் மாடலை ஜொலிக்க வைத்திருக்கும் தெர்மாகோல் பிளேட்டுகள், பந்துகள் பதிக்கப்பட்ட ஆடையை உருவாக்கியபோதும்- அதை மாடலிங் பெண்ணுக்கு அணிய வைத்தபோதும் காவ்யாவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கத்தான் செய்திருக்கின்றன.
தெர்மாகோல் தட்டுகள் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை என்பதால் ஒவ்வொரு பிளேட்டையும் மிக கவனமாக கோர்த்திருக்கிறார்கள். 20 பெரிய பிளேட்டுகளும், 20 சிறிய கப்புகளும் ஒரு ஆடையாகியிருக்கிறது. மேலாடையில் இடம்பெற்றிருக்கும் தெர்மாகோல் பந்துகள் அவ்வப்போது கீழே விழுந்தவண்ணம் இருந் திருந்ததால் அவைகளையும் சிரமப்பட்டு இணைத்திருக்கிறார்கள். ஆடையை உடுத்தும்போது பிளேட்டுகள் உடைந்துவிடாமல் இருக்க, சிலரது உதவியோடு மாடலிங் பெண்ணுக்கு அந்த உடையை அணிவித்திருக்கிறார்கள். சி.டி.க்களால் செய்த ஆடையை யும் திறம்பட வடிவமைத்திருக் கிறார்கள்.
ஐந்து ஆடைகளையும் இயற்கை பின்னணி கொண்ட இடத்தில் மாடல்களுக்கு அணிவித்து அழகாக படமாக்கியிருக்கிறார்கள். இளைஞர்கள் ஐவரும் போட்டோ கிராபர்கள் என்பதால் விதவிதமாக அதனை படம்பிடித்து காட்சிப்படுத்தி, பாராட்டு மழைக்குள் குளித்திருக்கிறார்கள்.
ஆடை வடிவமைப்புத் துறை காவ்யாவுக்கு பெரிய கனவாக இருந்திருக்கிறது. எம்.பி.ஏ. படித்துவிட்டு கைநிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த அவர், தனது கனவை நனவாக்க அந்த வேலையில் இருந்து விலகி, திருமணத்திற்கு பிறகு ஆடை வடிவமைப்பு கல்வியை பயின்றிருக்கிறார். தான் ஆடை வடிவமைப்புத்துறையில் புதுமைகள் படைக்க தனது கணவர் துவாரகநாத் மிகுந்த ஊக்கம் அளித்துவருவதாகவும் சொல்கிறார்.
எனது தாயார் ஹேமாவதி ஆடை வடிவமைப்பாளர். அவர் படித்த காலத்தில் பேஷன் டிசைனிங் இந்த அளவுக்கு பிரபலமாக வில்லை. இணையதள தேடலுக்கும் அப்போது வாய்ப்பில்லை. அதனால் அனுபவரீதியாகவே ஆடைகளை வடிவமைத்து, என் தாயார் பயன்படுத்தினார். எனக்காக கடைகளில் ரெடிமேடு ஆடைகள் வாங்கியதே இல்லை. அம்மா வடிவமைக்கும் டிசைன்கள் கொண்ட ஆடைகளைதான் நான் அணிந்தேன். அம்மாவுக்கு தேவையான டிசைன்களை எனது சித்தி பிரபாவதி வரைந்து கொடுப்பார். எனது குடும்பத்தில் வண்ணமயமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் நான் சிறுவயதில் இருந்தே வண்ணங்களை பார்த்து வளர்ந்தேன். பேப்ரிக் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங், வார்லி ஆர்ட் போன்றவற்றை கற்றேன்.
12-ம் வகுப்பு முடித்ததும் பேஷன் டிசைனிங் கற்க விரும்பினேன். ஆனால் என் பெற்றோர் நான் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் ஆசைப்படியே படித்து முடித்தேன்.வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்தேன். ஆனால் பணியில் நான் எதிர்பார்த்த நிறைவு ஏற்படாததால் விலகினேன். பின்பு 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் கற்றுக்கொடுத்தேன்.
அப்போதுதான் எனது சிறுவயது ஆசையான பேஷன் டிசைனிங் பற்றி என் கணவரிடம் சொன்னேன். அவர் முறையாக படித்து விட்டு பேஷன் டிசைனிங் துறைக்குள் நுழைந்தால்தான் சாதனைபடைக்க முடியும் என்றார். இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். படித்துக்கொண்டிருந்தபோதே கற்றறிந்த நுணுக்கங்களை கொண்டு தோழிகள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துகொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படித்து முடித்துவிட்டு ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறேன். நான் வடி வமைக்கும் ஒவ்வொரு ஆடையும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப் பானதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆடை வடிவமைப்பு பணி எனக்கு ஆத்ம திருப்தியை தருகிறது என்கிறார், காவ்யா. இவர் கணவருடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார்.