பெரம்பலூர்,
பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் வேலைவாய்ப்பு, மூன்று சக்கர வாகனம், அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் போன்றவைகள் கேட்டு 30 மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒருவருக்கும், சுய தொழில் தொடங்க வங்கி கடன் ரூ.10 ஆயிரம் பெற ஒருவருக்கு ஆணை என 8 பேருக்கு ரூ.1 லட்சத்து ஆயிரத்து 440 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.