மாவட்ட செய்திகள்

மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை

புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடியின் பங்கு ஒரு சதவீதம்கூட இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கவர்னர் மாளிகையில் இருந்து நிறைய தடை ஆணைகள் வருகின்றன. கவர்னர் கிரண்பெடி வருகிற 29-ந் தேதி தன்னுடைய 2 ஆண்டுகால பணியை முடிக்கின்றார். அவர் ஏற்கனவே 2 முறை புதுச்சேரி மக்களுக்கு எனது பணி 2 ஆண்டுகள்தான் இருக்கும். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்கமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அவர் சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன். பதவியில் இருப்பவர்கள் சொன்ன கூற்றை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அவர் இதுவரை எந்த அளவுக்கு பணிபுரிந்துள்ளார் என்பதை மக்கள் அறிவர். கடந்த 2 ஆண்டு காலத்தில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு அவரது பங்கு என்பது ஒரு சதவீதம் கூட கிடையாது.

மத்திய அரசிடம் பல முறை வாதாடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம், விமான சேவை, சுற்றுலா வளர்ச்சி திட்டம், துறைமுக அபிவிருத்தி திட்டம், பாகூர் மற்றும் திருநள்ளாறு கோவில்களை புனரமைக்கும் கிராம வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை நானும், அமைச்சர்களும் பெற்றுள்ளோம். ஆனால் இதில் கவர்னரின் பங்கு என்னைப் பொறுத்த வரையில் மிகவும் குறைவுதான்.

அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவது, விதிமுறைகளை மீறுவது, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் அதிகாரத்தில் தலையிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நேரில் சந்திக்கும்போதும் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கவில்லை.

புதுவை மாநிலத்தில் 2 ஆண்டுகால ஆட்சியில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளோம். இந்தியாவின் 17 சிறிய மாநிலங்களில் சுற்றுலா, சட்டம்-ஒழுங்கு, நிர்வாக சீர்திருத்தம், கல்வி ஆகியவற்றில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். மருத்துவத்துறையை பொருத்தவரை புதுச்சேரியில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 11.4 சதவீதம் ஆகும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை அமைப்புகளில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 துறைகளுக்கும் ரூ.576 கோடி மானியம் தருகின்றோம். அதிகப்படியான தொழிலாளர்களை என்ன செய்வது, இந்த நிறுவனங்களை லாபகரமாக கொண்டு வர என்ன செய்வது என்று ஆய்வு செய்து வருகிறோம். நிதி சிக்கன நடவடிக்கையில் ரூ.270 கோடி வருமானத்தை பெருக்கியுள்ளோம். புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக உள்ளாரே தவிர, துணையாக இல்லை.

ஒரு இடத்திற்குச் சென்று தன்னிச்சையாக உத்தரவுபோட யூனியன் பிரதேச சட்டத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சர்களுக்கு தெரியாமல் அதிகாரிகளை அழைத்து பேசக்கூடாது. துறை தலைவர், செயலாளர், தலைமை செயலாளர், அமைச்சர், முதல்-அமைச்சர் என்ற முறைப்படி கோப்புகள் அனுப்பித்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அறிவுரைப்படி கவர்னர் செயல்பட வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மொத்தம் 99 போர்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 64 போர்கள் அமைக்க நிதி வந்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.100 கோடி தந்துள்ளது. இன்னும் ரூ.100 கோடி வர உள்ளது. போராட்டம் நடத்தும் ரேஷன் கடை ஊழியர்களை இன்னும் 2 நாளில் அழைத்து பேசுவோம்.

புதுவையில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 1859 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசுத்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள், செவிலியர்கள் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...