மாவட்ட செய்திகள்

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.2¼ கோடி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

கடலூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.2 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

கடலூர்,

டெல்டாபகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் டெல்டா பகுதியில் ஆள்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ரூ.56 கோடியே 92 லட்சம் செலவில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 12ந் தேதி அறிவித்தார். இதற்கான அரசாணை மறுநாள் வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக கடலூர் மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியங்களில் மொத்த சாகுபடி பரப்பில் 55 சதவீதம் நெற்பயிருக்கும், மீதி உள்ள நிலப்பரப்பில் பயிறுவகை பயிர்கள் சாகுபடிக்கும் அரசு மானியம் வழங்குகிறது.

இதன்படி நெல் இயந்திர நடவுக்காக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கும், சிங்சல்பேட் நுண்ணூட்ட உரம் ஏக்கருக்கு ரூ.400 வீதம் மொத்தம் 2 ஆயிரம் ஏக்கருக்கும், திரவ உயிர் உரம் ஏக்கருக்கு ரூ.120 வீதம் 2 ஆயிரம் ஏக்கருக்கும், நுண்ணூட்ட உயிர் உரம் ஏக்கருக்கு ரூ.200 வீதம் 600 ஏக்கருக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

அதேபோல் பயிறுவகை பயிர்களுக்கு ஊக்கத்தொகையாக உளுந்துவிதை ஏக்கருக்கு ரூ.960 வீதம் 6 ஆயிரம் ஏக்கருக்கும், திரவ உயிர் உரம் ஏக்கருக்கு ரூ.120 வீதம் 6 ஆயிரம் ஏக்கருக்கும், டி.ஏ.பி. உரம் ஏக்கருக்கு ரூ.520 வீதம் 6 ஆயிரம் ஏக்கருக்கும், உழவு மானியம் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

நீர்பாசனத்துக்காக 6 மீட்டர் நீளம், 110 மில்லி மீட்டர் விட்டம் உடைய பிளாஸ்டிக் குழாய்கள் 100 விவசாயிகளுக்கு தலா 30 குழாய்கள் வீதம் 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வழங்கப்படும் பிளாஸ்டிக் குழாய்களின் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும்.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் செயல்பட்டுக்கு வரும் எனவும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.