ராயபுரம்,
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அவரது ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களுக்கு, 20 ரூபாய் நோட்டை டோக்கனாக வழங்கியதாக பரபரப்பாக பேசப்படுகிறது. டிடிவி.தினகரன் வெற்றி பெற்று விட்டதால் அந்த 20 ரூபாய் டோக்கனை கொடுத்தால், ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று, தண்டையார்பேட்டை நேதாஜி நகருக்கு கார் ஒன்று வந்துள்ளது. காரில் இருந்த நபர், 20 ரூபாய் டோக்கன் வைத்திருக்கும் சிலரை செல்போன் மூலம் அழைத்துள்ளார்.
பண்டலில் இருந்த அல்வா
இதைத்தொடர்ந்து, அந்த இடத்துக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் டோக்கனுடன் வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த, டோக்கனை வாங்கிக் கொண்டு, ஒவ்வொருவரிடமும் சிறிய பண்டல் கொடுக்கப்பட்டது. பண்டலை வீட்டுக்கு சென்று பிரித்து பாருங்கள். இங்கேயே பிரித்தால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று காரில் வந்தவர்கள் கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பண்டலை வாங்கிச் சென்றவர்கள், வீட்டுக்கு போனதும் அதை பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பண்டலில் அல்வா துண்டுகள் இருந்தன. பணம் கொடுப்பதாக கூறி, அல்வா கொடுத்ததை எண்ணி, அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஸ்டிக்கர்
இதையடுத்து, ஆர்.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காரை மடக்கி சோதனையிட்டனர். ஆனால், அதில், பணம் எதுவும் இல்லை. சில அல்வா துண்டுகள் மட்டும் இருந்தன. பின்னர், காரை விடுவித்தனர்.
ஆனால், அந்த காரில் அமைச்சர் ஒருவரின் பெயரிலான எம்.எல்.ஏ. வாகன சீட்டு அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆர்.கே.நகர் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வேலாயுதம் என்பவர் தான், காரில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தது தெரியவந்தது.
கார் பறிமுதல்
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த கார் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த நீலமுரளி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு முன்பு, நீலமுரளி அந்த காரில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருந்தாகவும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக மாறியபோது, அந்த ஸ்டிக்கரை அகற்ற மறந்துவிட்டதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குள்ளான காரை பறிமுதல் செய்த போலீசார் வேலாயுதம், நீலமுரளி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.