மாவட்ட செய்திகள்

கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு

கடை உரிமம் புதுப்பிப்பதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணைக்கு வந்ததால் தொழிலாளர் துறை பெண் உதவி கமிஷனர் உள்பட 4 பேர் தலைமறைவானார்கள்.

செங்குன்றம்,

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பரதன். இவர், திருவள்ளூர் அருகே நவீன எடைமேடை எந்திரங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் உரிமம் காலாவதியாகிவிட்டது.

இதனை புதுப்பிக்க பரதன், ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் உரிமம் புதுப்பித்தல் தாமதமானதால் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜான்பிரகாஷ் என்பவரை தொடர்பு கொண்டுகேட்டார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அதற்கு அவர், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வளர்மதிக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் அவர் கையெழுத்து போடுவார் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் பரதன் லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறியதால் அவரது கடையின் உரிமத்தை புதுப்பிக்க சான்று கொடுக்காமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பரதன், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. லவக்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வளர்மதி வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றனர்.

தலைமறைவு

இதை அறிந்ததும் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வளர்மதி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ், உதவி இன்ஸ்பெக்டர் ரவி, அலுவலக உதவியாளர் முருகவேல் ஆகிய 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். பெண் அதிகாரி வளர்மதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர். பின்னர் அவரது வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண் அதிகாரி உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...