மதுரை,
விருதுநகர் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரையைச் சேர்ந்த ஜோஸ் மோசஸ் ஆண்டனி என்பவர் மதுரையில் கடந்த 1998ம் ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தினார். இந்த நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தனர். இந்த நிலையில், திடீரென்று நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்டது. ஜோஸ் ஆண்டனி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணையின்போது, மதுரை 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜோஸ் ஆண்டனி அதே கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்காததால் பல கோடி ரூபாய் மோசடி செய்த தலைமறைவு குற்றவாளி ஒருவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டில் ஒரே நாளில் ஜாமீன் பெற்றுள்ளார். மேலும், ஜாமீன் மனுவில் வழக்கின் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை. எனவே அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், பல வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றது எப்படி? அவரது ஜாமீன் மனுவை ஏன் ரத்துச்செய்யக்கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் ஐகோர்ட்டு கிளையில் வருகிற 5ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.