மாவட்ட செய்திகள்

கோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக தனியார் பள்ளி தாளாளர் கைது

கோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). இவர் பழுதடைந்த டி.வி.களை சரி செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா (39). நெல்லை பாளையங்கோட்டை யை சேர்ந்தவர் சுந்தர் (39). இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்.

சுந்தருக்கும், வெங்கடேசனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி வெங்கடேச னின் கடைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2015-ம் ஆண்டு கோவை வந்த சுந்தர், வெங்கடேசன் -ஹேமலதா தம்பதியிடம், தான் பள்ளியை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், உங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள், அதை இரட்டிப்பாக திரும்பி கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.

அதை நம்பிய அவர்கள், தங்களிடம் இருந்த ரூ.51 லட்சத்தை சுந்தரிடம் கொடுத்தனர். ஆனால் அவர், பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறிய நாளில் கொடுக்கவில்லை. எனவே அவர்கள் பலமுறை சுந்தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் பணம் கொடுப்பதாக கூறி இழுத்தடித்து வந்துள்ளார்.

இது குறித்து வெங்கடேசன்-ஹேமலதா தம்பதியினர் கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுந்தரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த சுந்தரை வேறு ஒரு வழக்கில் சென்னை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள், கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதி பெற்று, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுந்தரை ரூ.51 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்து அழைத்து வந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பிறகு அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதற்கான அனுமதி கிடைத்ததும், போலீசார் சுந்தரை காவலில் எடுத்து, கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கெட் ராஜா மற்றும் அவரு டைய நண்பர்களை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அதில் சுந்தரும் ஒருவர். இவர் ராக்கெட் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மோசடி வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...