மாவட்ட செய்திகள்

கோழிப்பண்ணையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்பு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்களா? சப்-கலெக்டர் விசாரணை

நாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர். இதில் 3 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்களா? என சப்-கலெக்டர் கிராந்திகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மோகனூர்,

நாமக்கல் அருகே உள்ள சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவரது மனைவி பாப்பாத்தி (43). இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பெருமாள் கடந்த 19 ஆண்டுகளாக நாமக்கல் என்.புதுப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் தங்கி, குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார். இதற்காக பெருமாள் குடும்பத்தினருக்கு கோழிப்பண்ணை வளாகத்தில் வீடு ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெருமாள், கோழிப்பண்ணை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாகவும், வாரம் தோறும் பணிக்கான ஊதியத்தை பெற்று, அதில் கடனுக்காக சிறிய தொகையை செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பெருமாள் தான் வாங்கிய கடனில் சுமார் ரூ.25 ஆயிரம் மட்டும் திரும்ப செலுத்தி உள்ளார். அதற்கான வட்டி மற்றும் மீதம் உள்ள அசல் தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோழிப்பண்ணை உரிமையாளர் கடந்த சில மாதமாக முறையான ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதில், மனமுடைந்த பெருமாள் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்படி, வருவாய் துறையினர் நேற்று சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த பெருமாள், அவரது மனைவி பாப்பாத்தி, மகள்கள் ரம்யா, மீனா, நந்தினி, கவுரி, கவுசல்யா, மகன்கள் கார்த்தி, அஜித் என 9 பேரை மீட்டு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமாரிடம் ஒப்படைத்தனர்.

சப்-கலெக்டர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்களில் கவுசல்யா, அஜித் ஆகிய இருவரும் அங்குள்ள பள்ளிக்கு சென்று வருவதும், பாப்பாத்தி, மீனா, கவுரி மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் கோழிப்பண்ணைக்கு வேலைக்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது.

வேலைக்கு சென்று வந்த பெருமாள், அவரது மகள்கள் ரம்யா, நந்தினி ஆகிய 3 பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்களா? என்பது குறித்து சப்-கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...