மாவட்ட செய்திகள்

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இது தவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்று படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனாலும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடியில் பிரம்மாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்பேரில் 1,485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் இந்த கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.

அதேபோல் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் உள்ள மதகு வழியாக கண்ணன்கோட்டை நீர் தேக்கத்துக்கு அனுப்ப உள்ளனர். இதற்காக ஜங்காளபள்ளியில் இருந்து கண்ணன்கோட்டை வரை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுமுனையில் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலமாக தண்ணீரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில்விட உள்ளனர்.

இதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி, விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...