கலபுரகி,
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக வருகிற 22, 27-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்றும் (திங்கட்கிழமை), 2-ம் கட்ட தேர்தலுக்கு வருகிற 11-ந் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கிராம பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டிய இந்த பதவிகள் சில பகுதிகளில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஏலம் விடப்படுவது உண்டு.
அத்தகைய ஒரு ஏலம் கலபுரகி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கலபுரகி மாவட்டம் எட்ராமி தாலுகாவில் உள்ள பீலவார கிராம பஞ்சாயத்தில் வார்டு கவுன்சிலர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பஞ்சாயத்தில் 10 வார்டுகள் உள்ளன. அதில் 4 வார்டுகளின் கவுன்சிலர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த 4 பதவிகள் ரூ.26 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. இந்த ஏலம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பொது பிரிவு கவுன்சிலர் பதவி ஒன்று ரூ.8.50 லட்சத்திற்கும், தாழ்த்தப்பட்ட பெண்கள் பிரிவு பதவி ரூ.7.25 லட்சத்திற்கும், தாழ்த்தப்பட்ட ஆண்கள் பிரிவு பதவி ரூ.5.50 லட்சத்திற்கும், பழங்குடியினர் பெண்கள் பிரிவு பதவி ரூ.5.25 லட்சத்திற்கும் ஏலம் போய் உள்ளது. கிராம பஞ்சாயத்துகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு சார்பில் ரூ.2.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
பதவியை ஏலம் எடுத்தவர்கள் பணத்தை குறித்த தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த பதவி வேறு நபருக்கு வழங்கப்பட்டுவிடும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பதவிகளை ஏலம் விடுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.