மாவட்ட செய்திகள்

அறுவடை பணிகள் தீவிரம்

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அறுவடை பணி

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இப்பகுதிகளில் அறுவடை பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் அறுவடைக்கு முன்பே அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அறுவடை பணியானது நடைபெற்று வரும் சூழ்நிலையில் தற்போது வரை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காதது விவசாயிகள் மத்தியில் வேதனை அளித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கொள்முதல் நிலையம்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பிரதான தொழிலாக நெல் விவசாயத்தை நாங்கள் செய்து வருகிறோம். தற்போது இப்பகுதியில் அறுவடை பணி தொடங்கி ஒரு வார காலம் ஆகிவிட்டது.

அறுவடை பணி தொடங்குவதற்கு முன்பே வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அரசும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கும் என எதிர்பார்ப்பில் நாங்களும் தற்போது அறுவடை பணிகளை தொடங்கினோம். இந்தநிலையில் அரசு இன்னும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை.

பெரும் நஷ்டம்

இதேபோல் கடந்த முறையும் அறுவடை தாடங்கி நீண்ட நாளுக்கு பிறகு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்தனர். அதேபோல் இந்த ஆண்டும் அறுவடை தொடங்கி ஒரு வாரம் காலம் ஆகியும் இன்னும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அரசு கிலோவுக்கு ரூ. 19.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் தனியார் வியாபாரிகளிடம் தாங்கள் குறைந்த விலைக்கே அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.