மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் வருகிற 14-ந் தேதி உயர்நிலை பள்ளிகள் திறப்பு - பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் வருகிற 14-ந் தேதி உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

3 நாட்கள் விடுமுறை

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் உடுப்பியில் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். இதனால் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கெண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உயர்நிலைப்பள்ளிகள் திறப்பு

ஹிஜாப் விவகார வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மத அடையாளங்களை குறிக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எனது தலைமையில் ஆலோசனை நடத்தினேன். சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது, அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசித்தோம்.

முதல்கட்டமாக கர்நாடகத்தில் 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்க முடிவு செய்துள்ளோம். பி.யூ.சி. உள்ளிட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகளை திறப்பது குறித்து 2-வது கட்டமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நாளை (அதாவது இன்று) அனைத்து மந்திரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறேன்.

மாணவர்களிடையே நம்பிக்கை

இதில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது குறித்து அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க உள்ளேன். மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அமைதியை காக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. நாங்கள் மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.