மாவட்ட செய்திகள்

வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் மனு

தமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய குழுவினரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

கருகிய பயிர்களோடு வந்த விவசாயிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் மகேஸ்வரன் தலைமையிலான மத்திய குழுவினர் வறட்சி நிவாரணம் குறித்து கலெக்டர் நந்தகுமார் முன்னிலையில் அரசு அலுவலர்களுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் மத்திய குழுவினரை சந்திப்பதற்காக தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட தலைவர் மாணிக்கம் மற்றும் விவசாயிகள் அந்த ஓட்டலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மத்திய குழுவினரிடம் பேசி அனுமதி வாங்கிய பிறகே விவசாயிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மத்திய குழுவினரை சந்தித்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த கருகிய கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை காண்பித்து சேத விவரத்தை எடுத்து கூறினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை மத்திய குழுவினரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிவாரண தொகையை உயர்த்தி வழங்க...

மானாவாரி விவசாய பயிர்களான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், நீர்ப்பாசன சாகுபடி பயிர்களான நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 465-ம் வறட்சி நிவாரணமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிவாரணம் மத்திய அரசின் இயற்கை இடர்பாடு விதிப்படி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது என தமிழக அரசு கூறுகிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே மத்திய அரசின் பிரதமர் வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் மானாவாரி பயிர்களான மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.17 ஆயிரத்து 500-ம், பருத்திக்கு ரூ.21 ஆயிரமும், வெங்காயத்திற்கு ரூ.28 ஆயிரமும், நெல்லுக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.49 ஆயிரமும் வழங்க நிர்ணயித்த தொகையை வறட்சி நிவாரணமாக இயற்கை இடர்பாடு விதியின்படி உயர்த்தி வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதன்படி வறட்சி நிவாரண தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

காவிரியில் தண்ணீர் குறைந்துவிட்டதால் புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஒன்றியத்திலும், திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் விவசாயிகளால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே அந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மத்திய குழுவினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கூறினர்.