பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாள் பயன் தரக்கூடிய தென்னை மரங்கள் பல்வேறு இடங்களில் காய்ந்து, கருகி காய்ப்பு திறனை இழந்து விட்டன. தென்னை மரங்கள் கருகாமல் தடுக்க விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்தும், தண்ணீர் விலை கொடுத்து வாங்கியும் ஊற்றி வருகின்றனர். காய்கறி பயிர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானங்கள், பழங்கள், நுங்கு ஆகியவைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களில் 5 முறை மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 7.40 வரை சூறாவளி காற்று வீசியது. பின்னர் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகள் பழமையான 2 வேப்ப மரங்கள், ஒரு அசோக மரம் தாக்குபிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தன. மரம் விழுந்ததில் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் நின்ற மின் கம்பமும் சாய்ந்து விழுந்தது.
இதேபோல், வள்ளியம்மாள் லேஅவுட், காமாட்சி நகர், ராஜாமில் ரோடு, நேதாஜி ரோடு, சக்திநகர், சேதுபதி நகர் உள்பட பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. மரங்கள் விழுந்ததால் அந்த பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. பொள்ளாச்சி நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன.
சூறாவளி காற்றுக்கு தென்குமாரபாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரின் வீட்டில் சிமெண்ட் சீட்டுகளால் ஆன மேற்கூரை காற்றில் பறந்தன. மேலும், வீட்டின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இதேபோல் நாயக்கன்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து விழுந்து சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மின்கம்பங்கள் விழுந்த பகுதிகளில் மின் வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மழை நின்ற பின்னர் விரைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றினர். நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் நேற்று அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு பாலக்காடு ரோட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு புதிய கட்டிடத்தின் அலங்கார மேற்கூரை பெயர்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்தது. மேற்கூரை மற்றும் கட்டிட இடிபாடுகளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.