மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது

வழிப்பறியில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்னா (வயது 32). வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் வசித்து வருகிறார். நகையை அடகு வைக்க வெள்ளக்குட்டை கூட்டுறவு வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேறொரு மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு ஆணும், பெண்ணும், ரத்னா வைத்திருந்த கைப்பையை பிடுங்கி கொண்டு வேகமாகச் சென்று உள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த ரத்னா வாகனத்தை நிறுத்திவிட்டு கூச்சலிட்டு கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக வழிப்பறி சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது, 102 ரெட்டியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்காயம் போலீசார் தகவலறிந்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் ஆலங்காயம், பூங்குளம் அடுத்த ஆண்டல்வாடி நத்தம் பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 21), அவரது மனைவி ஜெயகல்யாணி (20) என்பதும், ரத்தனாவிடம் செயினை பறித்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல மாதங்களாக திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில், திருட்டு சம்பவங்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து ரத்னாவிடம் பறிமுதல் செய்த 1 பவுன் நகையை மீட்டு ரத்னாவிடம் ஒப்படைத்தனர்.