மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கிழக்கு தொகுதி உட்பட்ட சுந்தரராஜன்பட்டி, இரணியம், இலுப்பக்குடி, அழகர்கார்டன், ஜாங்கிட் நகர், ஆலாத்தூர், இந்திராநகர், மாரணி வாரியேந்தல், கொடிமங்கலம், எருக்கலைநத்தம், பாறைப்பட்டி, பெரியபட்டி, காஞ்சரம்பேட்டை, காவனூர், வெளிச்சந்தம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அவரை பூ தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
அப்போது வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, மதுரை கிழக்கு தொகுதி மக்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்பதை நான் பிரசாரத்திற்கு செல்லும் போது காண்கிறேன். நீங்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை தருகிறீர்கள்.
அதனை நான் வெற்றி பெற்றதும் உங்கள் நிறைவேற்றி தருவேன். மேலும் மதுரை கிழக்கு தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன். இந்த பகுதி மக்களின் கோரிக்கையான அனைவருக்கும் மாநகராட்சி குடிநீர், பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என உங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உடனே நிறைவேற்றுவேன்.
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற வில்லை. இதன் மூலம் ஏழை எளியவர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களை முதல்&அமைச்சர் எடப்பாடியின் அரசு சிறப்பாக செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். எனவே மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைய நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் இல்லம் தேடி இலவச கியாஸ் சிலிண்டர், மாதம் 1,500 ரூபாய், இலவச கேபிள் டி.வி., வீடு இல்லாதவர்கள் புதிய வீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் உங்கள் வீடு தேடி வர உள்ளது. அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெற்ற செய்ய வேண்டுகிறேன் என்றார்.