மாவட்ட செய்திகள்

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க மாட்டோம் ஈசுவரப்பா அறிவிப்பு

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க மாட்டோம் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க மாட்டோம் என்றும், எங்கள் அமைப்பில் உள்ளவர்களை நீக்குவதால் பயம் இல்லை என்றும் ஈசுவரப்பா கூறியுள்ளார்.

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் மாநில மாநாடு கூடலசங்கமத்தில் வருகிற 26ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முன்னணி தலைவரும், கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஈசுவரப்பா கலந்துகொண்டு பேசியதாவது:

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் ஈடுபட்டுள்ள வெங்கடேசமூர்த்தி பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெங்கடேசமூர்த்தியை மாநிலத்தில் தலைவர் அளவுக்கு பிரபலப்படுத்திய எடியூரப்பாவுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். என்ன செய்தாலும் எக்காரணத்திலும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க மாட்டோம்.

பா.ஜனதாவை சேர்ந்தவர்கள், சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் இருப்பது தவறா?. இதை முன்வைத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி எங்களை கட்சியை விட்டு நீக்கினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். யாரை வேண்டுமானாலும் கட்சியை விட்டு நீக்கட்டும். அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஆனால் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்துவோம். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த அமைப்புக்கு எடியூரப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏன் அவர் இந்த அமைப்பை எதிர்க்கிறார் என்பதை சொல்ல வேண்டும். இந்த அமைப்பு விஷயத்தில் எடியூரப்பா குழப்பம் அடைந்துள்ளார். வருகிற 26ந் தேதி கூடலசங்கமத்தில் நடைபெறும் மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கலந்துகொண்டு நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளை மேம்படுத்தவே இந்த அமைப்பை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதை எடியூரப்பா புரிந்துகொள்ளாமல் எங்கள் அமைப்பில் உள்ளவர்களை கட்சியை விட்டு நீக்குவதால் எங்களுக்கு பயம் இல்லை. நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு ஈசுவரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில், பா.ஜனதாவை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட வெங்கடேசமூர்த்தி பேசுகையில், என்னை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியதால் நான் பயப்படவில்லை. கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் யாரிடமும் போய் கெஞ்ச மாட்டேன். நான் தொடர்ந்து பா.ஜனதாவில் நீடிப்பேன். கட்சி பணியாற்றுவேன் என்றார்.

பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. முன்னாள் மேயர் வெங்கடேசமூர்த்தியை தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் இருந்து ஈசவரப்பாவும் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பா.ஜனதாவை விட்டு விலகுவது குறித்தும் ஈசுவரப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.