காஞ்சீபுரம்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் நேற்று காலை காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் உள்பட ஏராளமான தே.மு.தி.க.வினர் கலந்துகொண்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பின்னர் பிரேமலதா, நிருபர்களிடம் கூறியதாவது.
தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு பங்கு உள்ளது. அவர்கள் இருவரும் ஸ்டெர்லைட் ஆலையில் பங்குதாரர்கள் என்பதற்கு மக்கள்தான் ஆதாரம். அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களை சந்தித்த போது அவர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வந்தது. அப்போது பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது ஏன்?.
தே.மு.தி.க.வினர் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.