கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு படிப்படியாக குணம் அடைந்து, அவர்கள் 6 பேரும் வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளியூர்களில் இருந்து குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி தாலுகாவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ் நிலையம், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலங்களிலும் ஒருநாள்விட்டு ஒருநாள் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணியானது பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெறுகிறது.