மாவட்ட செய்திகள்

மேல்மலையனூரில் மாசிபெருவிழா: அங்காளம்மன் பல்லக்கில் வீதிஉலா தண்ணீர் இல்லாததால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழாவையொட்டி பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கோவிலில் மயானக்கொள்ளை விழா, தீ மிதி திருவிழா, தேர்திருவிழா ஆகியவை நடைபெற்றன. மேலும் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 10ம் நாள் விழா அன்று அங்குள்ள கங்கையம்மன் குளத்தில் தெப்ப உற்சவம் நடத்துவது வழக்கம்.

ஆனால் பருவமழை பொய்த்து போனதால் கங்கையம்மன் குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் இந்தாண்டு தெப்ப உற்சவம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதற்கு பதில் அம்மன் வீதிஉலா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் 10ம் நாள் விழாவையொட்டி காலை 8 மணிக்கு அம்மன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அம்மன் வீதிஉலா

பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் அருகே உள்ள அக்னி குளத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் உள்பட பலர் செய்திருந்தனர்.