நாமக்கல்,
நாமக்கல் அருகே சேலம் - கரூர் மெயின் ரோட்டில் முதலைப்பட்டி மேம்பாலத்தின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில் நகை பறிப்பு வழக்குகளை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைலமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் நேற்று மாலை நல்லிப்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை அவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சானூரை சேர்ந்த தங்கவேல் மகன் வேல்முருகன் (வயது 33) என்பதும், முதலைப்பட்டி அருகில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வசந்தபுரத்தில் பூட்டியிருந்த ஒரு வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நெக்லஸ், 6 பவுன் செயின் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் அவர் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே நகை பறிப்பு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.