மாவட்ட செய்திகள்

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை: 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை கருப்பந்துறையை சேர்ந்தவர் அந்தோணி மகன் மணிகண்டன் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் மணிகண்டன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற மதன், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரும் தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் மணிகண்டனையும், மதனையும் வெட்டினார்கள். இதை பார்த்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் மணிகண்டன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மதன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி மக்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருப்பந்துறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி கருபந்துறையிலும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மணிகண்டன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அவருடைய தந்தை அந்தோணி மற்றும் உறவினர்களிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வனசுந்தர், வேல்கனி, சோமசுந்தரம், புகழேந்தி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருப்பந்துறையில் வைக்கப்பட்டு இருந்த சமுதாய தலைவர் படத்தை சேதப்படுத்தியதாக சில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னணியில் இந்த கொலை நடந்ததா? அல்லது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை தேடி தூத்துக்குடிக்கு சென்று உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...