ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தை கடக்க கடந்த 20-ந்தேதி 3 மிதவை கப்பல்களும், ஒரு இழுவை கப்பலும் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன. அப்போது பாலம் திறக்கப்பட்டு கோவாவில் இருந்து கொல்கத்தா செல்ல வந்த 2 பெரிய மிதவைக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப் பாலத்தை கடந்து சென்றன. தொடர்ந்து கூடங்குளத்தில் இருந்து சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் செல்ல ஒரு இழுவை கப்பல் ஒன்றும் கடந்து சென்றது.
இந்நிலையில் ஒடிசாவில் இருந்து குஜராத் செல்ல வந்த பெரிய மிதவை கப்பல் பாம்பன் தூக்குப் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது வழக்கத்தைவிட கடல் நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் பாலத்தை கடக்க முடியவில்லை.
இதனால் அந்த கப்பல் சிறிது நேரம் தூக்குப்பாலம் அருகே உள்ள கடல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த கப்பல் துறைமுக அதிகாரிகள் உதவியுடன் பாம்பன் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீரோட்டத்தின் வேகம் சீரானதால் கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய மிதவைக் கப்பல் நேற்று தூக்குப் பாலத்தை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதையடுத்து பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு கப்பல் மெதுவாக பாலத்தை கடந்து சென்றது. அப்போது ரோடு பாலத்தில் நின்றபடி அந்த கப்பலை சுற்றுலாபயணிகள் பார்வையிட்டனர்.