மாவட்ட செய்திகள்

பெரியகுளத்தில் தொடர்திருட்டு, சிறுவன் உள்பட 4 பேர் கைது

பெரியகுளத்தில் நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்,

பெரியகுளம் தென்கரை சுதந்திரவீதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் கடந்த 24-ந் தேதி கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் கடைக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 3 டி.வி.க்கள், 2 லேப்டாப்கள் மற்றும் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.

பெரியகுளம் தென்கரை கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர் நவமணி. தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1000 மற்றும் 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக சேவியர் நவமணி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதையொட்டி தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூமிராஜா (வயது 20), பால்பாண்டி (21), முத்துமணி (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் நகைகள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் கைதான சிறுவன் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டான். மற்ற 3 பேரும் பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...