மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டியில், பட்டா வழங்குவதற்காக: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது - உதவியாளரும் பிடிபட்டார்

ஆண்டிப்பட்டியில் பட்டா வழங்குவதற்காக கூலித்தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜன். கூலித்தொழிலாளி. இவர் ஆண்டிப்பட்டியை அடுத்த சண்முகசுந்தரபுரத்தில் இருக்கும் வீட்டுமனைக்கு தடையில்லா சான்று மற்றும் பட்டா கேட்டு சக்கம்பட்டியில் உள்ள திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவரிடம் தடையில்லா சான்று மற்றும் பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

அந்த தொகையை அவரால் தரமுடியவில்லை. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் சின்னபிச்சை ஆகியோர் சேர்ந்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தடையில்லா சான்றிதழ் மற்றும் பட்டா தருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரங்கராஜன் புகார் கொடுத்தார்.

அவர்களை கையும், களவுமாக பிடிப்பதற்காக ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை ரங்கராஜனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் பணத்தை சக்கம்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அங்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரிடம் ரூ.10 ஆயிரத்தை ரங்கராஜன் கொடுத்தார். அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுரேஷ்குமாரையும், அவருடைய உதவியாளர் சின்னபிச்சையையும் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், உதவியாளர் சின்னபிச்சை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தடையில்லா சான்று மற்றும் பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...