கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முதல் 10 ஊராட்சிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஒன்றியக் குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் 46 ஊராட்சிகளிலும் 3 ஆட்டோக்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் சரவணன் பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வருவாய் ஆய்வாளர் ராமசாமி, தி.மு.க.வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வானியந்தல்.ஆறுமுகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.