கழுகுமலை,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வின்சென்ட் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி கற்பகவள்ளி (வயது 37). மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன் அந்த பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை கற்பகவள்ளி புதிய வீட்டிற்கு சென்று மோட்டாரை இயக்கி, குழாய் மூலம் சுவர்களுக்கு தண்ணீர் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கழுகுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சிபி (25). இவர் கடந்த 8 மாதங்களாக தூத்துக்குடியில் உள்ள சின்னகண்ணுபுரத்தில் தங்கி இருந்து கட்டிடவேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் டூவிபுரம் 2-வது தெருவில் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்ததை அறியாமல் சிபி அந்த கம்பியை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத் திலேயே உயிர் இழந்தார். இதனை அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.