மாவட்ட செய்திகள்

வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதே போல் அரியலூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதன்காரணமாக மழைநீர் ஆனைவாரி ஓடை வழியாக பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் கலந்தது. இந்த நிலையில், நேற்று ஓடையில் இருந்து அதிக அளவில் மழைநீர் வெளியேறியதால் வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி மழைவெள்ளம் சென்றது. இதில் சவுந்திரசோழபுரம்-கோட்டைகாட்டை இணைக்கும் வகையில் மண்ணால் அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்விவரம் வருமாறு:-

பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம், செம்பேரி, இறையூர், முருகன்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களும், அரியலூர் மாவட்டம் பாசிகுளம், பெலாந்துறை, முள்ளுக்குறிச்சி, ஆதனகுறிச்சி, மாத்தூர், கோட்டைக்காடு, ஆலத்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களும் பயன்பெறும் வகையில் சவுந்திரசோழபுரம் -கோட்டைக்காடு இடையே மண்ணால் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக பெண்ணாடம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழைநீர் ஆனைவாரி ஓடைவழியாக சவுந்திரசோழபுரம் அருகே வெள்ளாற்றில் கலந்தது. இந்த நீர் அதிகரித்ததால் நேற்று காலை திடீரென வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.