மாவட்ட செய்திகள்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா: 149 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் வழங்கினார்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் 149 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

தஞ்சாவூர்,

சுதந்திரதின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டு, போலீசாரின் மரியாதையை ஏற்று கொண்டார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் உடன் சென்றார்.

பின்னர் கலெக்டர், சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். கொரோனா தொற்று காரணமாக 5 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும், சமாதான புறக்களையும் கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பறக்கவிட்டனர்.

பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்த போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 29 துறைகளை சேர்ந்த 149 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், முதன்மைக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) பாலசந்திரன், தாசில்தார் வெங்கடேஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.