மாவட்ட செய்திகள்

உப்பு விற்பனை பணி தீவிரம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் திருப்பாலைக்குடி அருகே உப்பு உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது. தயாரான உப்பு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம்,

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் திருப்பாலைக்குடி அருகே உப்பு உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது. தயாரான உப்பு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதிலும் மாவட்டத்திலேயே அதிகமான உப்பள பாத்திகளை கொண்ட பகுதி சாயல்குடி அருகே வாலிநோக்கம் தான். இது தவிர ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆணைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை உள்ளிட்ட பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்துவருகின்றது. கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்து வருவதால் உப்பு உற்பத்தியும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

விற்பனைக்கு அனுப்பும் பணி

திருப்பாலைக்குடி அருகே சம்பை, பத்தனேந்தல், பப்பனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் இருந்து தொழிலாளர்கள் கல் உப்புகளை பிரித்து அதை ஒரு கிலோ எடை கொண்ட சிறிய பாக்கெட்டிலும் பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கல் உப்பு கல் பாக்கெட்டுகளாக அனுப்பப்படுவது மட்டுமல்லாமல் பெரிய ஓட்டல் மற்றும் மீன் கம்பெனிகளுக்கும் மொத்தமாகவும் லாரிகளில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுபற்றி உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் உப்பு உற்பத்தியும் வேகமாகவே நடந்து வருகின்றது. இதுவரை கல் உப்பின் விலை ஏதும் இந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்படவில்லை. இனிமேல்தான் கல் உப்பு விலை தெரியவரும். மாவட்டத்தின் பல ஊர்களிலும் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகமாகநடந்து வருவதால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மழை சீசனில் தான் உப்புக்கு நல்ல விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.