மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று, மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், புதூர் பாண்டியாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சுமார் 20 அடி தூரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது குடிப்பவர்கள், பாட்டில்களை குடியிருப்பு பகுதியில் உடைக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் மதுபோதையில் பலர், மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்கின்றனர். இதனால், குடியிருப்புவாசிகள் வெளியே நடமாடவே அச்சமாக இருக்கிறது. மேலும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். எனவே, அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும், என்று கூறி இருந்தனர்.

சம்பள பணம்

விளாத்திகுளம் இனாம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், இனாம் சுப்பிரமணியபுரம் மற்றும் பி.சண்முகபுரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இதில் 60 பேருக்கு கடந்த ஜூன்- 2016 முதல், சம்பள பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அனைவருக்கும் சம்பள பணம் கிடைக்க நடவடிக்கை வேண்டும், என்று கூறி இருந்தனர்.

நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கி முத்து கொடுத்த மனுவில், கடந்த 6.2.2016 அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் இசக்கிமுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு இதுவரை முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. அதே போல், கடந்த 24-ந்தேதி கடலில் சங்குகுளிக்கும் போது, ரொசான் என்ற மீனவர், மூச்சு திணறி பலியானார். இவர்கள் 2 பேருக்கும் நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.

வங்கி கணக்கில் முறைகேடு

ஓட்டப்பிடாரம் தாலுகா கே.கைலாசபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள பொதுமக்கள், எரிவாயு மானியம், முதியோர் ஓய்வூதியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பெறப்படும் சம்பள பணம் ஆகியவற்றை பெற, அக்கநாயக்கன்பட்டியில் உள்ள பாண்டியன் கிராம வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தோம். கடந்த மாதம் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள 120 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.500 மற்றும் ரூ.ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, எங்கள் பணத்தை மீட்டு வங்கி கணக்கில் வரவு வைக்க உதவ வேண்டும். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.