மாவட்ட செய்திகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்து. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை.

சென்னை,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்பட மாநிலம் முழுவதும் முக்கியமான ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில் உள்பட முக்கியமான கோவில்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருந்தது. ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. மக்கள் தங்களது வழக்கமான பணிகளை தொடர்ந்தனர். சாலைகளில் வழக்கமான வாகன போக்குவரத்து நடந்தது.

சென்னையை பொறுத்தவரையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கியமான கோவில்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தன.

மேலும் கோயம்பேடு பஸ் நிலையம், பாரிமுனை பஸ் நிலையம், தலைமை செயலகம், ஐகோர்ட்டு, எழும்பூர் நீதிமன்றம், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களும் வழக்கம்போல் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். வாகன போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

நேற்று பகல் 11 மணி வரை மட்டும் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, காமராஜர் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. மாலை வேளைகளில் மெரினா கடற்கரையில் வழக்கம்போல் அதிக அளவிலான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பான ரெட்அலார்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விமான நிலைய வளாகத்துக்குள் விமான பயணிகள், அவர்களை வழியனுப்ப வருபவர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதைசார்ந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் போன்றவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை.

இவர்களும் உரிய அடையாள அட்டைகளுடன் மட்டுமே விமான நிலையத்தின் உள்ளே செல்லமுடியும்.

அதேபோல் விமான பயணிகளிடமும் வழக்கமான சோதனைகளைவிட கூடுதலாக ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பின்னரே விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரம் முன்னதாகவும், உள்நாட்டு பயணிகள் 1 மணிநேரம் முன்னதாகவும் விமான நிலையம் வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...